அலகாபாத், ஜன.26 ஓராண்டிற்கு முன்பு மகா ராட்டிரா மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தலைமறைவான குற்றவாளி கும்பமேளாவில் குளிக்கச் சென்றபோது பிடிபட்டார். இதுவரை 60க்கும் மேற்பட்ட கொடூரக் குற்றவாளிகள் கும்பமேளாவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரைக் கும்பமேளா எனப்படும் கும்ப மேளா26ஆண்டுகளுக்கு ஒருமுறைஉத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை யும், யமுனையும் சந்திக்கும் சங்கம் என்ற இடத்தில் நடைபெறும். இந்தக் கும்ப மேளாவில் கலந்துகொள்ள இந்தியா முழு வதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் சென்றுகொண்டுள்ளனர். கும்ப மேளாவிற்கு சென்று குளித்தால் அனைத்துப் பாவமும்' போகும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த மூடநம்பிக்கையின் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள தலை மறைவு குற்றவாளிகள் கூட்டம் கூட்டமாகச் சென்று குளிக்கப் போய் காவல்துறையின் கைகளில் சிக்கிக் கொள்கின்றனர்.
கும்பமேளாவில் குளிக்க செல்வோர் குறித்து அடையாளங்கள் பதிவு செய்வதற்கும், எண்ணிக்கையை கண்காணிப்பதற்கும் பல நவீன கருவிகள் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளில் ஆதார் அட்டை குறித்த தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் கைரேகை, அங்க அடையாளங்கள் போன்ற தகவல்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் வருபவர்களில் குற்றவாளிகள் யாரேனும் இருப்பின் ஏற்கெனவே தேசிய குற்ற ஆவண பதிவேடுகளில் உள்ள அடையாளங்களுடன் பொருந்திப் போனால் உடன டியாக அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். காவல்துறையும் அவர்களை உடனடியாக கைது செய்து அவர் எந்த மாநில காவல்துறையினரால் தேடப்படுகிறாரோ அவர்களிடம் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற அனுமதியுடன் ஒப்படைக்கப் பட்டு வருகிறனர். இதுவரை 60- க்கும் மேற்பட்ட கொடூரக் குற்றவாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சோனு அரிச்சந்திர சர்மா என்பவர் அவுரங்காபாத் நகரில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். உணவகத்திற்கு வரும் பெண் ஒருவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததால், உணவகம் நடத்திவரும் கமலேஷ் பனிகா என்பவர் அவரை உணவகத்திலிருந்து வெளியேற்றியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சர்மா உணவ கத்தில் உள்ள சமையற்கூடத்தில் கத்தியால் குத்தியும், கொதிக்கும் எண்ணையை ஊற்றியும் கமலேசைக் கொலை செய்தார். இவ் விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நீண்ட தேடலுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தில் உள்ள புசாவல் என்ற நகரத்தில் தலைமறைவாக இருந்த சர்மாவைக் கைதுசெய்தனர்.
இவர் மீது ஏற்கெனவே மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்திலும் இவர் பணிபுரியும் போது கொலை மற்றும் கொள்ளை வழக்கு களில் ஈடுபட்டு இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவுரங்காபாத் நீதிமன்றம் கடந்த 2017- ஆம் ஆண்டு இவருக்கு நிபந்தனை பிணை வழங்கியது. அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். கொடூரக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட சர்மாவை மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராட்டிரா காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்தனர்.
இவர் கும்பமேளாவிற்கு வருகை தரலாம் என்று கருதிய காவல்துறையினர், இவரதுஅங்கஅடையாளங்களை அலகாபாத் தில்கும்பமேளாவில்பாதுகாப்புப்பணியில் உள்ள உ.பி. காவலர்களிடம் கொடுத்திருந்தனர். மேலும் தங்களது மகாராட்டிரா காவல்துறையிலிருந்து சிலரை மாறுவேடத்தில் கும்பமேளா சென்று குற்றவாளிகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தியது.
இந்த நிலையில் கடந்த புதன் அன்று (23.1.2019) கும்பமேளாவில் தனது நண்பர் களுடன் குளிக்கவந்த சர்மாவைக் குற்ற வாளிகளை அடையாளம் காட்டும் கருவி காட்டிக் கொடுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச காவலர்கள் மற்றும் மகாராட்டிரா காவல்துறையினர் இணைந்து சர்மாவைக் கைது செய்தனர். பின்னர் அவர் அலகாபாத் உயர்நீதிமன்றதில் நீதிபதி முன் நிறுத்தப்பட்டு பிறகு அவுரங்காபாத் கொண்டு செல்லப்பட்டார். இவர் பிடிபட்ட விவரத்தை குஜராத் மற்றும் மத்தியப்பிரதேச காவல்துறையிடம் முறைப்படி கூறப்பட் டுள்ளது. அவர்களும் வந்து தங்களின் மாநிலத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தவிருக்கிறார்கள்.
தொடர்ந்து பிடிபடும் குற்றவாளிகள்
ஏற்கெனவே பல குற்றவாளிகள் இதே பாணியில் பிடிபட்டுள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த வினு என்ற பப்லு, உத்தம் சிங். இவர்களின் கூட்டாளிகளை 8 ஆண்டுகளாக உத்தராகண்ட் மாநில காவல்துறை தேடிவந்தது. இந்த நிலையில் அலகாபாத் கும்பமேளாவில் இவர்கள் குளிக்க வருவார்கள் என்ற செய்தி கிடைத்தவுடன், அவர்களின் அடையாளங்களை வைத்து நவீன கருவிகள் காட்டிக்கொடுத்துவிட, இவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.அதேபோல் மற்றொரு மகாராட் டிரா மாநிலத்தைச் சேர்ந்த தப்பி ஓடிய குற்றவாளியை கும்பமேளாவில் அவரது கைப்பேசி சிக்னலை வைத்துப் பிடித்துள்ளனர்.
விதர்பா பகுதியைச் சேர்ந்த திருட்டுக் குற்றவாளி ஒருவர் நீண்ட நாள்களாக காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரின் அலைப்பேசியில் அவர் தொடர்புகொண்டார். அவர் தொடர்பு கொண்ட இடம் அலகா பாத் கும்பமேளா நடைபெறும் இடத்தில் இருந்து பேசியது தெரியவந்தது. இதனை அடுத்து உத்தரப்பிரதேச காவல்துறையினரின் உதவியால் அவர் கைது செய்யப்பட்டார். வடமாநிலங்களில் தேடப்படும் குற்றவாளி களாக இருந்த 60- க்கும் மேற்பட்டோர் இது வரை கும்பமேளாவில் குளிக்கச் சென்று பிடிபட்டுள்ளனர்.
இதேபோல் 2016- ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனியில் நடைபெற்ற உஜ்ஜைன் சிம்மஹஸ்தா என்ற கும்பமேளா நிகழ்வின்போது நூற்றுக்கணக்கான கொடூரக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 40 ஆண்டுகளாக நான்கு கொலைகளைச் செய்துவிட்டு சாமியாராக வேடமிட்டுத் திரிந்த சாமியாரும் அடக்கம். இரண்டு மாதம் நடைபெற்ற உஜ்ஜைன் கும்பமேளா முடிந்த பிறகு 138 கொடூரக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக அப்போதைய மத்தியப் பிரதேச காவல்துறை இணை ஆணையர் வி.மதன்குமார் ஊடகத்திற்குப் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
10-க்கு மேற்பட்டவரைக் கொலை செய்த கொடூரக் கொலைகாரன் குளிக்க வரும்போது பிடிபட்டான்
கும்பமேளாவில் தலைமுழுக வருபவர்களில் பெரும் திருட்டு மற்றும் கொடூரக்கொலைக் குற்றவாளிகளே அதிகம் உள்ளனர்.
வெள்ளியன்று 30 வயது உடைய கல்வா சாயிபாபா என்ற கொலைக்குற்றவாளி அலகாபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து அலகாபாத் காவல்துறை சிறப்பு ஆணையர் நிதின் திவாரி கூறும் போது 4 ஆண்டுகளாக 10-க்கும் மேற்பட்டவர்களை வீடு புகுந்து கூர்மையான ஆயுதங்களால் கொலை செய்து உடைமைகளைக் கொள்ளையடித்து வந்த கல்வா சாயிபாபா என்பவரை நாங்கள் கைதுசெய்துள்ளோம். ஏற்கெனவே அவர் ஒருமுறை எங்களிடம் பிடிபட்டுள்ளார். அப்போது அவரது அங்க அடையாளங்கள் அனைத்தையும் நாங்கள் சேகரித்துவைத்தோம். இந்த நிலையில் இவர் பிணையில் வெளிவந்து மீண்டும் கொலை மற்றும் திருட்டுச்செயலில் ஈடுபட்டார். இவரால் தாக்கப்பட்ட 5 பேர் உடல் ஊனமுற்று வாழ் வாதாரம் இழந்த நிலையில் உள்ளனர். ஒருவர் நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
கும்பமேளாவில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்கள் மற்றும் குற்றவாளிகளை அடை யாளம் காணும் கைரேரைக்கருவிகளின் மூலம் இந்தக்குற்றவாளி கும்பமேளாவில் சாமியார் வேடத்தில் வந்துள்ளது தெரியவந்தது. இவர் சாமியாராக இருந்ததால் இவரை பொது இடத்தில் வைத்து பிடிப்பது பிரச்சினையை உருவாக்கிவிடும் என்பதால் இவரது குழுவினர் தங்கியிருந்த கூடாரத்தில் இருந்து இவரை தனியாக அழைத்துவந்து பிறகு விவரத்தைக் கூறி கைதுசெய்தோம்.
இவர் தற்போது கும்ப மேளாவிலும் தன்னுடன் இருக்கும் ஒருவரை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார் என்று தற்போது தெரியவந்துள்ளது, தற்போது அவரை கும்பமேளாவிலிருந்து வெளியே கொண்டு சென்று அலகாபாத் இணை ஆணையர் அலுவலத்தில் வைத்துள்ளோம். திங்களன்று அவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் நிறுத்தப்படுவார். இவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ 50,000 பரிசு வழங்கப்படும் என்று இட்டா மாவட்ட காவல் ஆணையர் எஸ்.என்.சம்பத் ஏற்கெனவே அறிக்கை விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.